29/09/2025
நவராத்திரி; ஒவ்வொரு வருடமும் ஒரு அழகான பத்து நாட்களைப் பதிவுசெய்துவிட்டுப் போகும். அதிலும் பள்ளிக் கால நவராத்திரி பூசைகளில் இன்னும் ஒரு படி அதிகமாகவே சந்தோஷம் நிறைந்திருக்கும். பள்ளிகளை எல்லாம் கோவில்களாகவும், மாணவர்களை எல்லாம் பக்தர்களாகவும் மாற்றும் நாட்கள் அவை. வேறு மார்க்கத்தைப் பின்பற்றுவோராக இருந்தாலும், ஏன் கடவுள்மீது ஈடுபாடு காட்டாத மனிதர்களாக இருந்தாலும் கூட, அவர்கள் தங்கள் வாதங்களையும் நம்பிக்கைகளையும் கடந்து பக்தி நிலையில் நிற்பார்கள். பக்தி என்றால் கடவுளிடம் சரணாகதி அடைவது மட்டுமல்ல.
வீரம் நிரம்பி வழியும் முகத்துடன் "ஓம் சக்தி ஓம்" என ஆரம்பிக்கும் பாடல் தொடங்கி, கொஞ்சம் சோகத்தை எடுத்து, அலங்காரமாக முகத்தில் பூசிக்கொண்டு பாடும் , "ஆதி பராசக்தி தாயம்மா, அகிலாண்ட நாயகி நீயம்மா" எனும் பாடல்வரை. ஒன்றாக சேர்ந்து பாடும் பாடல்களும், அந்தப் பாடல்களால் வெளிப்படும் உணர்வுகளையும் பக்தி எனும் வார்த்தைக்குள் அடக்க முடியாது. அதிலும் உயர்வகுப்பு எடுத்து நடத்தும் பூஜைகளில் டோலக் இசையும், சுருதி பெட்டியும் கூடுதல் உணர்ச்சிகளை கிளப்பிவிடும்.
மாணவர்களுக்கு அவசரத்தில் கிடைத்த இலைச் சருகுகள், வேலியோரத்தில் வளர்ந்து கிடக்கும் முள் செடிப் பூக்கள், நஞ்சி என நம்பிய மஞ்சல் காய்கள், நாயுன்னி பூக்கள், பொங்கல் பொங்கிய பின்னர் குப்பையாக மிஞ்சிய தேங்காய் சக்கை—இவை எல்லாம் முதன் முறையாக கடவுள் சன்னிதானத்துக்குக் தரிசனம் காண வரும். வண்ண கோவையாக ஒன்று சேர்ந்து கோலத்தை அலங்கரிக்கும். கோலத்துடன் சேர்ந்து அந்தக் குழுவுக்கிடையேயான ஒற்றுமையும், மாணவர்களின் திறமையும், ஆளுமையும் மிளிரும்.
காடு மலையெல்லாம் ஏறி கதை பேசி, பூக்களைப் பறித்து மாலை கட்டுவதும், "சகலகலாவல்லியே" எனப் பாடி பூக்களை அள்ளி தூவி, பூரிப்படைவதும். வாழைத்தார் அளவுக்கு கூட வளராத வயதிலும், வாழை மரத்தையும் வாழை இலைகளையும் தூக்கிக்கொண்டு எறும்பு மாதிரி அணிவகுக்கும் மாணவர்களும். உழைப்பின் அடையாளமாக ஒட்டிக்கொள்ளும் வாழைக் கரையும்—எந்தக் காலத்திலும் பெருமை பேசிக்கொள்ள உதவும் குறிப்புகள்.
- இராசையா தனுஜன்
Ra Dhanu
Photo - Gallola TV ( SeeMaa Event)